புத்தகக் காட்சி
இலக்கியவாதிகள், வாசகர்கள், பொதுமக்கள் மத்தியில் மாபெரும் திருவிழாவாக நடந்த புத்தகக் காட்சியானது பொருட்செலவு மற்றும் ஆட்செலவில் நடந்து முடிந்தது. இந்தப் புத்தகக் காட்சி சுமார் 900 அரங்குகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இந்தப் புத்தகக் காட்சியிலும் எப்போதும்போல பல விமர்சனங்கள் நிலவி வந்தன. வழக்கத்துக்கு மாறாக, ஜனவரிக்கு முன்னரே, கண்காட்சியை நடத்தியதால் பல விமர்சனங்கள் எழுந்தது. இதைத் தாண்டி சாதி (தீண்டாமை) ரீதியான விமர்சனங்களும் எழுந்தது.
ஆனால் யாரும் அடிப்படை தேவையான கழிவறைகளைக் கண்டுகொள்ளவே இல்லை.
கழிவறைகள் சுத்தமாகவே பராமரிக்கப்பட்டு இருந்தன. ஆனால் சற்று பருமனானவர்கள் உள்ளே சென்று கதவைத் தாழிட்டு சிறுநீர் கழிக்க முடியாத நிலையில்தான் கட்டமைப்பு இருந்தது. குப்பைத்தொட்டிகளும் சரிவர இல்லாத காரணத்தால் நாப்கின்கள் அப்படியே கழிவறையிலே வீசப்பட்டது.
இதையும் தவிர மாபெரும் உழைப்புச் சுரண்டலும் நடை பெற்றது.
வாரநாட்களில் 2 மணிக்குத் துவங்கும் புத்தகக் காட்சியில் இரவு 8:30க்கு அரங்குகள் மூடப்பட வேண்டும். ஆனால் அரங்குகள் மூட 9லிருந்து 9:30 வரை ஆகிவிடும். அரங்கு உரிமையாளரைப் பொறுத்து இந்த நேரம் மாறும்.
வார இறுதி நாட்களில் காலை 11 மணிக்கே துவங்கி, அரங்கை மூட இரவு 10 வரை ஆகி விடும். (அரங்கு உரிமையாளரைப் பற்றி) இப்படியாக இருக்க ஒரு நாள் கூலியாக 700 மட்டுமே வழங்கப்பட்டது. சில அரங்குகளில் 500. இதைத் தவிர அரங்குகளில் பெரும்பான்மையான நேரம் நின்றுக்கொண்டே தான் இருக்க வேண்டும். சில அரங்குகளில் சிற்றுண்டியும் வழங்கப்பட மாட்டாது.
அதேபோல சில முன்னணி பதிப்பக ஜாம்பவான்கள் செய்யும் கொடுமைகள் சொல்லிலடங்காதவை. எடுத்துகாட்டிற்கு 'ஸ்மார்ட் ஆன பெண்கள் பில் போட வேண்டும்.', 'பெண்கள் மட்டுமே வேண்டும்' போன்ற பிரத்தியேகமான நிபந்தனைகள். ஆண்களை மூட்டைத் தூக்கவே வைத்திருப்பதாகப் பெருமையாகக் கூறும் சில பெண்ணியவாதி கூட்டமும் இருந்தன. மேலும் இரண்டிலிருந்து மூன்று நபர்கள் தேவைப்படும் அரங்கில் வெறும் ஒரே நபரை மட்டுமே வைத்து உழைப்பை உறிஞ்சிக் கொள்கின்றனர் சில முற்போக்குவாதிகள்.
பெருந்திரளான கூட்டங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் நடுவே எப்போதும் மிகச் சிறும்கூட்டத்தின் மனதை வலி சூழ்ந்து இருள் கவ்வி கொள்கிறது...
Comments
Post a Comment