பெண்களாகிய நாங்கள்...

பெண்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டனர். ராக்கெட் ஏறி விண்வெளிக்கே சென்று சாதனை படைத்துவிட்டனர். உள்நாட்டு விளையாட்டுகள் முதல் சர்வதேச விளையாட்டுகள் வரை கோப்பைகளை வாங்கிக் குவித்து வீராங்கனைகளாக வளம் வருகின்றனர் என்று மார்தட்டிக்கொள்ளும் சமுதாயத்தில், சுதந்திரமாகப் பெண்கள் வெளியே நடமாட ஏதுவான மற்றும் பாதுகாப்பானச் சூழல் உள்ளதா? எனப் பார்த்தால் இல்லை என்பதே உண்மை! பெண்களின் பாதுகாப்பு வீட்டிற்கு வெளியே தான் கேள்விக்குறியாக உள்ளது என்று பார்த்தால் வீட்டிற்குள்ளேயும் இப்படித்தான் உள்ளது. பெண்கள் எல்லாவற்றிலும் முன்னேறி வந்தாலும் இச்சமூகம் பெண்களுக்கு ஏதுவானதாக இல்லை என்பதே உண்மை. குடும்ப பெண் இந்த நேரத்தில் வெளியே வருவாளா? என்ற கேள்வியின் ஊடாக ஒரு பெண்ணைத் தரநிர்ணயம் செய்பவர்களே! ஏன் பெண்கள் மட்டும் குடும்ப அமைப்பில் அணுக்கமாகவும் இணக்கமாகவும் இயங்க வேண்டும். குடும்ப ஆண்கள், மற்ற ஆண்களைப் பார்த்து உங்கள் கேள்விகளை ஒரு போதும் முன் வைப்பதில்லையே ஏன்? ஆண்களுக்குக் குடும்ப அமைப்பில் பங்கு இல்லையா? இரவு நேரங்களில் வெளியே சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆண்கள் குடும்ப ஆண்களா? என்ற ஒழுக்க நிர்ணயக் கேள்விகள் ஆண்களை நோக்கி ஏவப்படுவதில்லையே ஏன்?

நாட்டின் உரிமைகள் அனைத்தும் மனிதர்களுக்குப் பொதுவானதே ஆகும். இதில் எல்லா விதப் பாலினமும் அடக்கம். ஒரு பெண் தான் வன்புணர்வுக்கோ, கொடுமைக்கோ உள்ளாக்கப்பட்டால் அனைவரும் அவளின் ஒழுக்கம் குறித்து புலன் விசாரணை செய்வதையே முழுமுதல் வேலையாகக் கொண்டுள்ளனர். இது போன்றதொரு சம்பவம் என் வாழ்விலும் நடந்துள்ளது. மாலை ஆறு மணியளவில், சென்னை சாலிகிராமம் பகுதியிலுள்ள நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் முடித்துவிட்டு நானும் என் தோழியும் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகி அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்தோம். ஒரு பேருந்து வந்தது. ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டோம். முன் இருக்கையில் ஒரு நபரும் எங்களுக்கு இணையாக ஆண்கள் பக்கம் நடுத்தர வயதுடைய ஒரு நபரும் உட்கார்ந்து இருந்தனர். எங்களுக்கு இணையாக உட்கார்ந்திருந்த அந்த நபர் எங்களைப் பார்த்து சுய இன்பம் செய்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல், கத்திக்கொண்டே அந்த நபரைப் பேருந்தில் இருந்து இறக்கி, அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி வாசலில் நின்றிருந்த அரசு வாகனத்திலிருந்த அதிகாரியிடம் கொண்டு சென்று நடந்தவற்றை கூற, அந்த அதிகாரி எனக்குத் தெரியாது என்று நழுவிவிட்டார். எதிரே உள்ள டீக்கடையிலிருந்த அனைத்து ஆண்களும் ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. இதற்கிடையில் அவன் ஓடிவிட்டான். இது பெண்கள் பள்ளியில் அருகே நடப்பதால் கண்டிப்பாக புகார் செய்யவேண்டும் என்று அருகில் உள்ள காவல்நிலையத்திற்குப் புகார் கொடுக்க சென்றால், முதல் கேள்வியாக ஆறு மணிக்கு நீங்கள் ஏன் அங்கே சென்றீர்கள் என்ற கேள்வியை எங்களைப் பார்த்து எழுப்பினார் காவலர் ஒருவர். சரி என்று உள்ளே சென்று எஸ்.ஐ யிடம் கூறினால் அவர் காவலன் ஆப்பில் அழைத்திருக்க வேண்டும் என்று வெறுமனே அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். பிறகு நாங்கள் சில தினங்கள் அந்தப் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் வேறொரு நிறுத்தத்திலிருந்து மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கே வீட்டிற்கு கிளம்ப பேருந்தில் பயணிக்க துவங்கினோம் ஆனால் அந்த நபர் அந்த பகுதியிலேயே சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தார். உளவியல் ரீதியாக இந்தச் சம்பவம் எங்களை அதிகம் பாதித்தது. இந்த மாதிரி எல்லாப் பெண்களுக்கும் சொல்லில் அடங்காத பல அனுபவங்கள் உள்ளது.ஆண்கள் பெண்களிடம் கேட்டால் தெரியும். பெண்களுக்கு மட்டும் தான் இந்த நிலையா என்ற இல்லை சிறார்கள் (ஆண் குழந்தைகளும்) மாற்று பாலினத்தவர்களுக்கும் இதே நிலைதான். ஆண்சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தால் அதன் கருத்துரைப்பொட்டியில் "நான் இருந்து இருக்கவேண்டும்" என்ற கொச்சையான கருத்துகளை கூறுவது அருவருக்கத்தக்கது. பெண்களைக் கேள்வி கேட்பது, கலாச்சாரம் சொல்லி கொடுப்பது, நெறிப்படுத்துவது ஆகியவற்றை நிறுத்திவிட்டு ஆண்களைச் சமூகப்படுத்துங்கள். ஆண்கள் இன்னும் மிருக மனப்பான்மையிலே உள்ளனர். மேலும், ஒழுக்க சீலர்களே பெண்களின் ஆடை குறித்த கவலை உங்களுக்கு எப்போதும் வேண்டாம்.

சமூக கட்டமைப்பில் இன்னும் பெண்களை உள்ளடக்கிய சமூகமாக நம் சமூகம் இல்லை ஆணாதிக்கம் தன்மையுடனே, நெகிழ்வு தன்மையற்றதாகவே இருக்கிறது. 









Comments

Popular posts from this blog

நிரபராதிகள்

வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!