முதல் மரணம்
வாழ்க்கையில் என்னை பெரிதும் பாதித்த முதல் மரணம் என்னுடைய அப்பாவின் மரணம்தான். வீடே ஒரு மாதிரியான அமைதியில் உறைந்திருக்க, மௌனத்தின் பேரிரைச்சல் மட்டும் சூழ்ந்திருந்தது. காலை ஒரு பதினோரு மணி அளவில், எனக்கு மட்டும் அந்த செய்தி தெரிய வந்தது.
"அவர் இறந்துவிட்டார்"
ம்... அப்பா இறந்துவிட்டார். பதினைந்து வயதில், எப்படி அதைக் கையாளுவது, அணுகுவது என எதுவும் புரியாமல் தவித்து நின்றேன் தனியாக. பிறகு கொஞ்சம் நேரத்தில் எல்லாச் சொந்தமும் கூடிவிட்டது சரியாக 1:40 மணிக்கு. அவர் இறந்துவிட்டார் என எல்லார்க்கும் தெரியவந்தது. எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லப்பட்ட செய்தி, எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. மழை கொட்டி தீர்த்தது. அப்பாவின் உடலை ஐந்து மணிக்கு எடுத்து வருவதாகச் சொன்னார்கள். இரண்டு நாட்களாக எதுவும் சரியாக சாப்பிடாத சித்தப்பா அழுதுகொண்டே உட்கார்ந்து இருந்தார். தங்கைகளுக்கும் , அம்மாவிற்கும் எந்த ஆறுதலை கூறி ஆசுவாசப்படுத்துவதென்று தெரியாது நான் ஒருபக்கம் இருக்க, மறுப்பக்கம் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்பாவின் உடல் வந்தது. நேராக பூஜை அறையில் படுத்திருந்தார். உடல் முழுவதும் வெண்ணிற துணியில் சுற்றப்பட்டிருக்க, முகம் மட்டும் தெரிந்தது. பிறகு நடுக்கூடத்திற்கு கொண்டுவந்து கிடத்தி இருந்தார்கள். அவர் இறந்த பிறகும் கூட, அந்தச் சிரிப்பு மாறாமல் அதே சிரிப்போடு கண்களை மூடி இருக்கிறார். எனக்கு அவரை பார்க்க முதலில் தைரியம் இல்லை. பிறகு மெதுவாக பார்த்தேன். அதிர்ந்து போனேன். பிறகு வாசலுக்கு கொண்டு வந்தனர். ஒரு மாதிரி இழவு வீட்டிற்கே உரிய வாசனை கூடியிருந்தது காற்றில். அப்பாவின் தலைமாட்டில் விளக்கும் ஊதுபத்திகளும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. அம்மா அருகிலே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். பச்சை ஓலைகளைப் பின்னி கொண்டிருந்தனர். கூட்டத்தில் நானே அவர் அருகில் போக முடியவில்லை. ஒரு வழியாக அவர் அருகில் நின்று அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். உடல் முழுவதும் பூமாலைகள், நெற்றியில் ஒற்றை ரூபாய் நாணயம் சந்தனத்தால் ஒட்டி வைக்கபட்டிருக்கிறது. சடங்குகள் ஆரம்பமாகி விட்டது. முதலில் அம்மாவிற்கு பிறந்த கொடி சடங்கு நடந்தது. மாமா அம்மாவிற்கு கொடிசேலையை தர, அம்மாவை மற்றவர்கள் தயார் செய்தனர். நெற்றியில் பெரிய பொட்டு, கை நிறைய கண்ணாடி வளையல்கள், தலை முழுக்க பூவோடு அழுது கொண்டே இருந்தார், அப்பாவின் முகத்தை பார்த்து. பிறகு பங்காளிகளும் சொந்த பந்தங்களும் அப்பாவை வலம்வந்து தலையில் எண்ணெயும் சீகைக்காயும் வைத்துவிட புத்தாடையோடு படுத்திருந்தார்.
"கொல்லிகுடத்தை தூங்குவது யார் ?" என வெட்டியான் கேட்டார் .
எல்லோரும் முணுமுணுத்து கொண்டிருந்தனர், ஆண் வாரிசு இல்லாததால். சித்தப்பா யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் என்னை கைகாட்டினார். பிறகு நான் சடங்கிற்கு தயாரானேன். உடல் முழுவதும் ஈரமாக்கப்பட்டு ஒரு வெள்ளை வேட்டியை கட்டி கொண்டேன். வெள்ளை துண்டை மேலே போட்டு கொண்டேன். அப்பாவின் உடல், எடுத்துச் செல்ல தயாராக்கப்பட்டது. கொல்லிகுடத்தோடு நான் முன்னே சென்றேன். வீட்டு பெண்கள் ரோட்டில் உருண்டனர் .அப்பா அசையாமல் வந்து கொண்டிருந்தார். சுடுகாட்டின் வாசலில் வெட்டியான் அரிச்சந்திர பூஜையை முடிக்க, சுடுகாட்டில் எல்லாம் தயார் நிலையில் இருந்தது. எரி மேடையில் படுத்திருந்தார் அப்பா. அனைவரும் வாய்க்கரிசி போட்டோம். கொல்லிகுடத்தை தோள்பட்டைக்குப் பின்னால் பிடித்து கொண்டு வலம் வந்தேன், மூன்று முறை. பிறகு குடத்தை உடைத்துவிட்டு கொல்லி கட்டையை ஏந்தி, முன் சென்று தீ வைத்தேன். உடல் பற்றி எறியதொடங்கியது. ஒரு வாடை வர தெடங்கியது. சுடுகாட்டில் யாரும் இல்லை. என்னையும் சித்தாப்பாவையும் வெட்டியானையும் தவிர்த்து. உடல் மேல் எழும்ப தொடங்கியது. வெட்டியான் அடிக்க தொடங்கினார். வெளியே வெந்து கொண்டிருந்தது அப்பாவின் உடல்; உள்ளே வெந்து கொண்டிருந்தது என்னுடைய மனம்.
Ezhuthal Ezhuvai...
ReplyDelete🥺
ReplyDeleteSuper 🔥🔥
ReplyDelete