அவரழைப்பு

 கல்லூரியை முடித்துவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து அமர்ந்து கொண்டு, ஏதோ யோசித்தபடி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

தெளிந்த வானம் எங்கு பார்த்தாலும் ஒரே நீல நிறம் , எனக்கு வானத்தை பார்க்க விருப்பம் இல்லை கீழே தரையையும் , எதிரில் சாலையில் போகும் வாகனங்களையும் பார்த்து கொண்டிருந்தேன் .ஒரு பேருந்து கூட வரவில்லை . அருகிலிருந்த சிறுவன் சாக்லேட்டோடு  தன் அம்மாவுடன் அமர்ந்திருந்தான், தீடீரென வானத்தை பார்த்தேன் வானம் அவ்வளவு அழகாக இருந்தது. சற்று முன் பார்த்த வானமா இது ? என தோன்றியது பஞ்சை பரவவிட்டது போல,அவ்வளவு ரம்மியமான காட்சி .அவனும் அவன் அம்மாவும் கிளம்பிவிட்டனர் பக்கத்தில் யாரும் இல்லை. தரையில் சில எறும்புகள் வந்து சிதறி கிடந்த சாக்லேட் துண்டை தூக்கி சென்றன .

திரும்பி வானத்தை பார்க்கும் போது அப்பா நினைவுக்கு வந்தார். இன்றோடு ஒரு வருடம் முழுவதுமாக முடிந்துவிட்டது அவர் பிரிந்து கடைசியாக சொர்க்க ரதத்தில் தான் பார்த்தேன். கண்ணீர் ஒரு துளி கசிந்து கன்னத்தை தாண்டி கீழே ,எறும்பு ஒன்றின் மீது விழுகிறது .தீடீரென ஒரு அழைப்பு எடுத்து காதில் வைத்தேன் 

"அப்பா பேசுறேன் 

ஹலோ"

என்றவுடன்  நான் மௌனமாக இருந்தேன் . மேலும் அவரே தொடர்ந்தார் .

"சித்ரா தான "

"இல்லை நா சித்ரா இல்லை"

"ஓ...சரிம்மா எங்க மவ பேரு சித்ரா 

அவ நம்பர்ன்னு தான் இந்த நோட்ல எழுதி இருக்கு ..

கடசி நம்பர் 99 ஆ 77 ஆ "

"99 "

"நா மதுரை ல இருக்கேன் 

அவ திருச்செந்தூர் ல படிக்கிறா 

நீ எங்கம்மா இருக்க?"

"நா சென்னைல "

"ஓ...சரி சரிம்மா ஒரே சத்தமா இருக்கு "

"பஸ் ஸ்டாப்ல இருக்கேன் 

சரி வீட்ல வேறயாராவது இருந்தா அவங்களுக்கு கால் பண்ண சொல்லுங்க "

"ஓ..அதான் சத்தமா இருக்கு 

நா வீட்ல பசங்களோட சண்ட போட்டு தனியா இருக்கேன் 

எனக்கு நாலு ஆம்பள பசங்க 

ரெண்டு பொட்டபுள்ளைங்க 

எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிட்டேன் இவ தான் கடகுட்டி "

"ம்.."

"சரி நா நேர்லயே போய் ஒரு எட்டு பாத்துட்டு வரேன் 

நீ பாத்து போம்மா 

வெச்சிடவா ?"

"ம் ..."

என்றவாறு ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்தது மனது .


Comments

Post a Comment

Popular posts from this blog

பெண்களாகிய நாங்கள்...

நிரபராதிகள்

வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!