புது வருஷம்

எப்போதும் போல இன்றும் கல்லூரி முடிந்தவுடன் மரத்தடியில் உட்கார்ந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன் .
இந்த மரத்தடி என்னை எப்போதும் அரவணைத்து ,ஆசுவாசப்படுத்துகிறது ஒரு நாள் தவறாமல் தினமும் வருவது வழக்கம் . ஹெட் ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் ,பத்து நிமிடத்தில் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டேன் . எப்பவும் போல இன்றும் நிறைய கூட்டம்தான் , அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து ஐரா படத்து "மேகதூதம்"பாடலை கேட்டுகொண்டே , கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன் ஒரு மூன்றடி தூரத்தில் ஒரு காதல் ஜோடி நின்றுகொண்டு இருந்தனர். அவர்களுக்குள் ஏதோ சண்டை போலிருக்கு அந்த பையன் அந்த பொண்ணிடம் ரொம்ப நேரமாக கெஞ்சிகொண்டிருந்தான் . இரண்டு இருக்கைக்கு அப்பால் ஒரு கர்ப்பிணி உட்கார்ந்துகொண்டு இருந்தாள். அடுத்ததாக புதுப்பேட்டை படத்தில் இருந்து "ஒரு நாளில் வாழ்க்கை" பாட்டு காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.
தூரத்தில் இருந்த   நாய் ஒன்று  நான்கு குட்டிகளோடு ஒடுகிறது .இந்த கூட்டத்திலும் இத்தனை வாகனங்களுக்கு மத்தியிலும் ,மணி ஆறை தாண்டி, ஏழாக போகிறது அடுத்த பேருந்தில் ஏறி விடவேண்டும் என யோசித்துக்கொண்டே எழுந்தேன் சரியாக ஒரு பேருந்து வந்தது நிற்க மட்டுமே இடம் கிடைத்தது நின்றுகொண்டேன் கதவு ஓரமாக இப்போது மாரி படத்தில் இருந்து "ரௌடிபேபி" பாட்டு போய்கொண்டு இருக்கிறது . கூட்டம் இன்னும் அதிகமாகி 
கொண்டே இருக்கிறது ரொம்பவும் சிரமப்பட்டு நின்றுகொண்டு இருக்கிறேன் . கண்டக்டர் இருக்கையில் அமர்ந்து கொண்டே டிக்கெட்டை கொடுத்தார் .எனக்கு பின்நின்றிருந்த ஆள் என்னை இடித்துக்கொண்டே இருந்தார் சற்று நகர முயற்சி செய்தேன், முடியவில்லை அமைதியாக நின்றேன்.சற்று நேரத்தில் அவர் கைகள் என் பின்பக்கத்தை தடவிகொண்டிருந்தது பிறகு முதுகு முழுவதையும் .என்னால் எதுவும் செய்ய முடியவில்லை நான் குற்றவாளியை போல பயந்து,அசிங்கபட்டு நின்று கொண்டேயிருக்கிறேன் இவ்வளவு கூட்டத்தில் ! மரியான் படத்திலிருந்து "நெஞ்சே எழு "பாடல் ஒடிக்கொண்டிருக்கிறது .சற்று கூட்டம் குறைந்தது சற்று நகர்ந்து தூரமாக நின்று கொண்டேன் . நான் நகர்த்தவுடன் அருகிலிருந்தவளை உரசியும், தடவியும் கொண்டிருக்கிறான் அவன் .பெண்கள் மட்டும் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் அவன் நகரவில்லை, துளியும் அசையவில்லை . எனக்கான நிறுத்தம் வந்துவிட்டது இறங்கிகொண்டேன் கற்றது தமிழிலிருந்து "பறவையே எங்கிருக்கிறாய்" தொடங்கியது வீட்டிற்கு சென்றேன் .குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு படுக்கைக்கு சென்றேன் என்னவோ இன்று நடந்தது என்னை நிறைய பாதித்தது என் உடலை அருவருப்பாக நினைத்தேன் , அழுதுகொண்டே வருடத்தின் கடைசி நாளை முடித்துக்கொண்டு .அடுத்த வருடத்திற்குள் நுழைந்தேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண்களாகிய நாங்கள்...

நிரபராதிகள்

வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!