வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!
'வடக்கன்' என்று சொல்லி வடமாநிலத் தொழிலாளர்களைக் கேலியாகவும் கிண்டலாகவும் சித்தரித்து, வடமாநிலத்தவர் மீதான ஏளனப் பிம்பத்தைக் கட்டமைத்து, அவர்கள் மீதான வெறுப்புணர்வைச் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தூண்டி, அதன் மூலம் வருவாய் பார்த்தவர்களும், அதை ரசித்தவர்களும் இன்று சமூகம் சீர்கெட்டுவிட்டதாக அங்கலாய்த்து கொள்கிறார்கள்.
ஆம், சிறார்கள் செய்யும் எவ்விதக் குற்றங்களையும் நம்மால் நியாயப்படுத்த முடியாது, அப்படி நியாயப்படுத்துவதும் நியாயம் அல்ல! ஆனால் ஒரு நிமிடம் 'ஏன்?' என்று யோசித்தால் புரியும். சமூகம் என்பது ஏதோ வேற்றுக் கிரகவாசிகளால் கட்டமைக்கப்பட்டது அல்ல; இங்கு இருக்கும் நம் அனைவராலும்தான் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அரசு, அதிகாரிகள், குடும்பம், சுற்றம் ஆகியவற்றால் தான் இந்தச் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அந்தச் சிறார்கள் மட்டுமல்ல, நாமும்தான் குற்றவாளிகள்! சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட நாமும்தான் காரணம். இதைச் சிந்திக்காமல், 'வடசென்னை பசங்க', 'புள்ளிங்கோ' என்று அவர்கள் மீது வெறும் வெறுப்பை மட்டும் உமிழ்வது ஏற்புடையது அல்ல.
ஒருவரை அவரின் வாழ்விடத்தை வைத்தோ, உண்ணும் உணவை வைத்தோ, புறத்தோற்றக் காரணிகளான உடுத்தும் உடை, சிகையலங்காரம், வார்த்தைப் பிரயோகம் ஆகியவற்றை வைத்தோ குற்றப்பின்னணியுடன் சேர்த்து பேசுவது சரியல்ல. ஆளும் அரசு, போதைப்பொருட்களைச் சிறார்களிடையே புழங்கும் அளவிற்குச் சுலபமாக விட்டுவைத்திருக்ககூடாது. மேலும் இம்மாதிரியான புழக்கம் எங்கு அதிகம் இருக்கிறது என்பதைக் கண்காணித்து அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் முற்றிலும் அரசின் கையில்தான் இருக்கின்றன. அதே போல, புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி போன்ற ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்பதும் இத்தகைய குற்றங்கள் நடக்க முக்கிய காரணமாக உள்ளன.
கானாப் பாடல்கள், ரீல்ஸ் மோகம் மட்டுமே இந்தக் குற்றத்திற்குக் காரணங்கள் அல்ல. போதைப் பொருட்களின் பயன்பாடுதான் மிக முக்கிய காரணம்.
அதே போல, "இந்தச் சிறார்களைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் அவர்கள் திருந்திவிடுவார்களா? இவர்களை அடிக்கவேண்டும், சுட்டுத்தள்ள வேண்டும்..." என்று கூறுபவர்கள் உண்மையிலே இந்தச் சிறார்களை விட மிகவும் மோசமானவர்கள்! உண்மையிலேயே இவர்கள்தான் சமூகத்திற்கு எதிரானவர்கள். இவர்களும் இதையெல்லாம் கடந்துதான் வந்து இருப்பார்கள். அதே போல, இப்படிச் சொல்பவர்கள் அனைவரும் யாராக இருக்கிறார்கள் என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டியுள்ளது. எந்தவொரு தண்டனையின் நோக்கமும் குற்றவாளியை சீர்படுத்தி நெறிப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அதை விடுத்து உயிரைப் பறிப்பதாக இருக்கவேண்டும் என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை.
இன்னுமொரு கும்பல் 2000க்குப் பிந்தைய தலைமுறைகள்தான் தான்தோன்றித் தனமாக இருக்கிறார்கள், நாங்கள் எல்லாம் அப்படி இல்லை; 90-களில் எல்லாம் இப்படியான சம்பவம் இல்லை, வாத்தியார்கள் கண்டிப்புடன் இருந்தார்கள், அடித்து நல்வழிப்படுத்தினார்கள், ஆனால் இன்றைய தலைமுறையினர் வாத்தியாரையே அடிக்கிறார்கள், அல்லது அடித்தால் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என்றெல்லாம் கூறுவது தீர்வை நோக்கி நகராமல் இன்னும் பழமைவாதத்தன்மையுடன் இருப்பதையே வெளிக்காட்டுகின்றன. அடித்து நல்வழிப்படுத்துவதும் வன்முறைதான்! இப்படி ஆசிரியர்கள் அடித்ததால் எத்தனைப் பேரின் கல்வி பாழானது? அது எவ்வாறு ஒருவரை உளவியல் ரீதியாக சீர்குலைக்கிறது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றப்படி, நாம் கண்டிப்பாக மாறியாக வேண்டும்.
அதைவிடுத்து 90-களில் சிறார்கள் இப்படி இல்லை, புள்ளிங்கோதான் பிரச்சனை, ரீல்ஸ்தான் பிரச்சனை என்றெல்லாம் கூறி பிரச்சனையைத் திசை திருப்புவது சரியல்ல. போதைப் பொருள் புழக்கத்தை அரசு மிகக் கூர்மையாக ஆராய்ந்து கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதில் மட்டும் மாற்றுக்கருத்தில்லை.
Comments
Post a Comment